Friday, November 15, 2024
HomeLatest Newsசீன விஞ்ஞானிகளின் புதிய சாதனை!

சீன விஞ்ஞானிகளின் புதிய சாதனை!

சீனா அமைத்து வரும் டியாங்கொங் விண்வெளி நிலையத்தில் (Tiangong space statio) நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

குறித்த, இந்தச் சோதனையானது, நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவும் வகையில், உணவு உற்பத்தியை விண்வெளியில் மேற்கொள்வதற்கான அறிவியல் முயற்சியின் முதல் படியாக அமையலாம் என சைனா டெய்லி தெரிவித்துள்ளது.

மேலும், விண்வெளியில் நெற்பயிர் செய்கை சோதனைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள போதிலும் டியாங்கொங் விண்வெளி நிலையத்தில் நெல் விதைப்பில் இருந்து அறுவடை வரையான ஒரு முழுச் சுழற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது இதுவே முதன்முறையாகும் எனவும் சைனா டெய்லி அறிக்கையிட்டுள்ளது.

பீஜிங், விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

இந்நிலையில், சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்ஜியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கின. இதற்காக இரு வகை செடிகளின் விதைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடியை உற்பத்தி செய்யும் பணியானது தொடங்கியது.

இதில், தாலே கிரஸ் 4 இலைகளை உற்பத்தி செய்தது. இந்த செடியானது, முட்டைக்கோவா போன்ற பசுமையான இலைகளை கொண்ட காய்கறிகளை ஒத்தது. ஆனால், அரிசி விதையானது 30 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்தது விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது.

விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தாவரங்கள் எப்படி செயற்படுகின்றன என்பது பற்றி புரிந்து கொள்வதற்காக சீன விஞ்ஞானிகள் வாழ்க்கை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளியில் தலா இரு தாவரங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி இரண்டு பரிசோதனைகள் வழியே பகுப்பாய்வு செய்யப்படும். அவற்றை வளர்க்க நுண்ணிய ஈர்ப்பு விசை கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பினை எப்படி பயன்படுத்தலாம் என்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பது பற்றியும் அறியப்படும் என இந்த முயற்சி குறித்து கருத்து வெளியிட்ட சீன அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜெங் ஹுகியாங் தெரிவித்துள்ளார்.

மேலும், பூமி போன்ற சூழலை ஒத்த, செயற்கை சுற்றுச்சூழலை கொண்டு மட்டுமே இந்த பயிர்களை வளர்க்க முடியும். செடிகளின் வளர்ச்சியை ஒப்பிட்டு, விண்வெளியில் தகவமைத்து கொள்ளும் வகையிலான கூடுதல் பயிர்களை ஆய்வின் வழியே நாம் கண்டறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விண்வெளியில், தாவர விதைகள் பரிசோதனையில் சீனா ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலையில், விண்வெளியில் இருந்து திருப்பி கொண்டு வந்த விதைகளை வைத்து முதல் தொகுதி அரிசியை அறுவடை செய்தது.

சொர்க்கத்தில் இருந்து வந்த அரிசி என பெயரிடப்பட்ட இந்த வகை அரிசிக்கான 40 கிராம் விதைகள், 7.6 இலட்சம் கி.மீ. தொலைவுக்கு நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு பூமிக்கு திரும்பி கொண்டு வரப்பட்டது.

அதிக கதிரியக்கங்கள், புவியீர்ப்பு விசையற்ற சூழல் போன்ற சுற்றுச்சூழலில் விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையாக உற்று நோக்கப்படுகிறது.

Recent News