Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅதிர்ஷ்டவசமாக கிடைத்த லாட்டரியில் கோடீஸ்வரியான பெண்!

அதிர்ஷ்டவசமாக கிடைத்த லாட்டரியில் கோடீஸ்வரியான பெண்!

அலுவலக பார்ட்டியில் பெண் ஒருவர் தனக்கு கிடைத்த பரிசை மற்றவருக்கு கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்து வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் தற்போது கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.

அமெரிக்காவின் கென்டக்கி மகாணத்தில், லுயிஸ்வில்லி நகரில் உள்ள ஹார்மன் பல் மருத்துவ மையத்தில் அலுவலக மேலாளராக இருப்பவர் லோர் ஜேன்ஸ். அலுவலக பார்ட்டியில் இருவருக்கு முதலில் 25 அமெரிக்க டாலர் (ரூ. 2065) மதிப்பிலான மேக்ஸ் கிஃப்ட் கார்டு, பரிசாக கிடைத்தது. 

அதன்பின், அந்த பரிசை அலுவலகத்தில் உள்ள சக பணியாளருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது பார்ட்டியின் விதி. அதன்படி, அவர் அந்த கிஃப்ட் கார்டை மற்றொரு பணியாளருக்கு கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்து அதே 25 அமெரிக்க டாலர் மதிப்பிலான சுரண்டும் வகையிலான பல லாட்டரி சீட்டுகளை பெற்றுள்ளார். இந்த பார்ட்டி கடந்த செவ்வாய்கிழமை  நடந்துள்ளது.

பின்னர், அந்த லாட்டரி சீட்டை ஜேன்ஸ் சுரண்டியுள்ளார். அப்போது, முதல் சீட்டில் அவருக்கு 50 அமெரிக்க டாலர் (ரூ. 4136) பரிசாக கிடைத்துள்ளது. தொடர்ந்து, இரண்டாவது சீட்டை சுரண்டியபோது அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அந்த சீட்டில், 1 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலர் அவருக்கு கிடைத்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 1. 4 கோடி ஆகும். இதைக்கண்ட அவராலும், அவரின் சக பணியாளர்களாலும் நம்பவே முடியவில்லை. 

இதுகுறித்து, கோடீஸ்வரராகி உள்ள அந்த பெண் கூறுகையில்,”எனக்கு லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததை அடுத்து பலரும் பித்துப்பிடித்தது போன்று ஆனார்கள். தொடர்ந்து, கால்குலேட்டர்களை எடுத்து பலமுறை அது உண்மைதானா என்று சோதித்து பார்த்தனர். சிலர் அந்த சீட்டை, லாட்டரியின் ஆப்பில் ஸ்கேன் செய்து அதன் உண்மைதன்மையை உறுதிசெய்துனர்” என்றார். 

தனக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததை குடும்பத்தினரிடம் அந்த பெண் பகிர்ந்துகொண்டுள்ளார்.  ஆரம்பத்தில் கணவர் அவர் சொல்வதை நம்பவில்லை. அவர் சரியாக தொகையை பார்த்திருக்க மாட்டார் என நினைத்துள்ளார். இதையடுத்து, பலரும் பார்ட்டியில் அதனை கொண்டாடிய பின்னர்தான் அது உண்மை என அறிந்துகொண்டதாக கூறினார். 

இந்த பணத்தை வைத்து குடும்பத்தினருக்கு வாகனம் வாங்கிக்கொடுக்க உள்ளதாகவும், மகளின் கல்விக்கடனை செலுத்த இருப்பதாகவும் லாட்டரியில் பரிசுபெற்ற ஜேன்ஸ் தெரிவித்துள்ளனர். முதலில் கிடைத்த பரிசை விடுத்து, சக பணியாளரிடம் வாங்கிய லாட்டரி சீட்டில்தான் கோடீஸ்வரராக மாறுவேன் என நினைத்திருக்கவே மாட்டார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Recent News