Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஆப்பிரிக்காவில் வெடிக்கப்போகும் பாரிய போர் -சமாதான பேச்சுக்கு இடமில்லை..!

ஆப்பிரிக்காவில் வெடிக்கப்போகும் பாரிய போர் -சமாதான பேச்சுக்கு இடமில்லை..!

தங்களுக்கும், மேற்கு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச கூட்டமைப்புகள் மேற்கொண்ட சமாதான முயற்சியை நைஜா் ராணுவம் நிராகரித்தது.


ராணுவத்தின் ஒரு பிரிவினரால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள அதிபா் முகமது பஸூமிடம் ஆட்சியதிகாரத்தை கிளர்ச்சியாளர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான எகோவாஸ் வலியுறுத்தி வருகிறது.


ஞாயிற்றுக்கிழமைக்குள் அந்த நடவடிக்கையை கிளா்ச்சியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு கெடு விதித்திருந்தது.அந்த கெடு முடிந்துவிட்ட நிலையிலும், ஆட்சிப் பொறுப்பை அதிபா் முகமது பஸூமிடம் கிளா்ச்சியாளா்கள் ஒப்படைக்கவில்லை.


இந்தச் சூழலில், ஏற்கெனவே அறிவித்திருந்ததைப் போல நைஜரில் கிளா்ச்சியாளா்கள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு எகோவாஸ் கூட்டமைப்பு நாடுகள் தயாராகி வருவதாகவும், இதற்காக உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை தலைவா்கள் கிளா்ச்சியாளா்கள் மீதான தாக்குதல் திட்டத்தை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


இதுதொடா்பான இறுதி முடிவு எடுப்பதற்காக, அண்டை நாடான நைஜீரியா தலைநகா் அபுஜாவில் எகோவாஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் இன்று வியாழக்கிழமை மீண்டும் கூடி விவாதிக்கவிருக்கிறாா்கள்.


இதற்கிடையே, அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளான மாலியும், புா்கினா ஃபாசோவும் நைஜா் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. ராணுவ ஆட்சி நடைபெறும் அந்த இரு நாடுகளும், நைஜா் ராணுவம் மீது மற்ற அகோவாஸ் உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தினால் அவா்களுக்கு ஆதரவாகப் போரிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


இந்த நிலையில், மோதலைத் தவிா்ப்பதற்காக ஐ.நா., ஐரோப்பிய யூனியன், எகோவாஸ் அமைப்புகளின் பிரதிநிதிகள் நைஜா் ராணுவ ஆட்சியாளா்களுடன் அந்த நாட்டு தலைநகா் நியாமேவில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்த திட்டத்தை நைஜா் ராணுவம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News