Wednesday, November 13, 2024
HomeLatest Newsஇலங்கையில் நாள் ஒன்றுக்கு 1050 கோடி ரூபா கடன்! - வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 1050 கோடி ரூபா கடன்! – வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கை அரசு தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 50 கோடி ரூபாவை உலகில் கடனாக பெற வேண்டியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார அறிவியல் மற்றும் தொகை கல்வி பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அரசுக்கு இந்த ஆண்டில் நாள் ஒன்றில் கிடைக்கும் வருமானம் 653 கோடி ரூபா என்பதுடன் செலவு ஆயிரத்து 705 கோடி ரூபா.

வரவு செலவுத்திட்ட ஆவணத்திற்கு அமைய அரசுக்கு அடுத்த ஆண்டில் நாள் ஒன்றில் கிடைக்கும் வருமானம் 950 கோடி ரூபா எனவும் அடுத்த ஆண்டில் நாள் ஒன்றுக்கான செலவு 2 ஆயிரத்து 160 கோடி ரூபா எனவும் வசந்த அத்துகோரள கூறியுள்ளார்.

வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே அடுத்த ஆண்டில் அரசின் வருமானம் அதிகரித்து காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு அரசு பெறும் கடன் ஆயிரத்து 364 கோடியாக அதிகரிக்கும்.

அரசின் வருமானம் மற்றும் செலவுகள் இடையிலான இடைவெளி பெரியளவில் அதிகரித்து வருகிறது. அரசின் நிதி கொள்கையானது தவறான திசையை நோக்கி செல்லும் விதத்தை இது காட்டுகிறது எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே தனிநபருக்காக அரசு இந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு பெற்றுக்கொள்ளும் கடன் 473 ரூபா என்ற அளவில் உள்ளது. இது கடந்த ஆண்டில் 371 ரூபாவாக காணப்பட்டது.

அத்துடன் அடுத்த ஆண்டு இந்த தொகையானது 609 ரூபாக அதிகரிக்கும் எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News