Tuesday, December 24, 2024
HomeLatest Newsதாய்லாந்தில் களைகட்டிய குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா!

தாய்லாந்தில் களைகட்டிய குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா!

குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாய்லாந்தில் ஆண்டு தோறும் குரங்குகளுக்காக உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

தாய்லாந்தில் உள்ள லோப்பூரியில் உள்ள ஃபிரா ப்ராங் சாம் யோட் கோவிலில்   இந்த வருடத்திற்கான விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சுமார் 4000 கிலோவுக்கும் மேற்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் குரங்குகளுக்கு விருந்தாக கொடுக்கப்பட்டன. 

ஆயிரக்கணக்கான குரங்குகள் காட்டிலிருந்தும் அங்கு இருக்கக்கூடிய கோவிலின் இடிபாடுகளுக்குள் இருந்தும் வெளியே வந்து இந்த பண்டிகையில் கலந்து கொண்டன.

இவ்விழாவை முன்னிட்டு பெங்கொக்கிலிருந்து வடக்கே 150 கிலோமீற்றர் (93 மைல்) தொலைவில் உள்ள லோப்புரி மாகாணத்தின் பழங்கால சின்னமான பகோடாக்களின் வளாகத்திற்கு வெளியே தட்டுகளை வைத்திருக்கும் குரங்கு சிலைகளின் வரிசைகள் வரிசையாக வைக்கப்பட்டன, தன்னார்வலர்களால் குரங்குகளுக்கு வீதிகள் தோறும் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இது மங்கி பஃபெட் பெஸ்டிவல் (Monkey Buffet Festival) என அழைக்கப்படுகிறது. இந்த விழா தொடங்கும் பொழுது குரங்கு உடையில் நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த திருவிழா குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இத்திருவிழாவை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர்.

குரங்குகளின் மன்னர் என அழைக்கப்படக்கூடிய ஹனுமன் ராம பிரானின் மனைவி சீதையை காப்பாற்ற உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.

இது தவிர சுற்றுலா நகரமான லோப்பூரியில் குரங்குகளை காணவே ஏராளமான பயணிகள் வருகிறார்கள். ஆக சுற்றுலாவை மேம்படுத்தும் குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்விழா நடத்தப்படுவதாகவும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக உள்ளூர் தொழிலதிபர் ஒருவரால் இந்த விழா தொடங்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னதாக, லோப்புரியில் சுமார் 300 குரங்குகள் இருந்தன,   இப்போது கிட்டத்தட்ட 4,000 ஆக அதிகரித்துள்ளது.  லோப்புரி ஒரு குரங்கு நகரம் என்று அழைக்கப்படுகிறது, இங்கு  குரங்குகளும் மக்களும் ஒற்றுமையாக வாழ முடியும். 

இங்குள்ள குரங்குகள் மக்களுக்கோ சுற்றுலா பயணிகளுக்கோ எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இந்த விழா 1980ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி ஆண்டுதோறும் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்துக் கொண்டே வருகிறது.

Recent News