Thursday, November 21, 2024
HomeLatest Newsஓமானில் இலங்கை பெண்களின் அவலம் ! வெளியானது விபரம்

ஓமானில் இலங்கை பெண்களின் அவலம் ! வெளியானது விபரம்

இலங்கையில் இருந்து சுற்றுலா வீசாவில் அபுதாபிக்குச் சென்ற 17 பெண்களை, ஓமானுக்குப் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்தபோதும், அந்த பெண்கள், தமது எச்சரிக்கையை மீறியதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து சுற்றுலா வீசாவில் பல பெண்கள் அபுதாபிக்கு வந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு சென்றனர்.

குறித்த பெண்களிடம், தூதரக அதிகாரிகள் மற்றும் அபுதாபியின் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தமக்கு பிரச்சினைகளோ முறைப்பாடுகளோ இல்லையென அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனினும் அவர்களில் ஒருவர், இலங்கைக்கு திரும்ப சம்மதித்த நிலையில், அவர் தூதரகத்தால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அபுதாபி தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், 2022 நவம்பர் 15ஆம் திகதியன்று, ஏனைய பெண்கள், ஓமானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண் ஒருவர், இலங்கையில் உள்ள தமது மகள் மூலம், இலங்கையின் முக்கிய கலைஞர் ஒருவருடன் தொடர்பு கொண்டு உதவிக் கோரியதை அடுத்தே, சந்தேகத்திற்கிடமான இந்த மனித கடத்தல் மோசடி அண்மையில் வெளியானது.

இலங்கையின் கலைஞர் துஷ்யந்த் வீரமனின் வீட்டில் பணிபுரிந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர், தனக்கு ஓமானில் வேலை கிடைத்துள்ளதாக கூறிச் சென்ற நிலையிலேயே இந்த மோசடி வெளியானது.

குறித்த பெண், தாம் அபுதாபியில் அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தம்முடன் 16 பேர் இருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் ஹட்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அறையில் தன்னுடன் இருந்த பெண்களின் கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகள் முகவர்களால், எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மறைத்து வைக்கப்பட்டிருந்த தமது தொலைபேசியின் மூலமே தம்மால் தொடர்பை மேற்கொள்ள முடிந்தது என்றும் அவர் தமது மகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணின் மகள், கலைஞர் வீரமனுக்கு இதனை அறிவித்துள்ளார்.

வீரமன், குறித்த பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அது அபுதாபியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர், குறித்த பெண்ணின் ஊடாக, வீரமன் தம்பதியினர் ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போதே குறித்த பெண்கள் சுற்றுலா வீசாவில் அபுதாபிக்கு சென்றமை தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஹட்டனை தளமாகக் கொண்ட முகவர் ஒருவரின் ஊடாக, குறித்த பெண்கள் கண்டி- கட்டுகஸ்தோட்டையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் நிலையமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மருதானையில் உள்ள பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு குறித்த உப முகவர், அவர்களை அனுப்பியிருந்தார்.

மருதானையில் அமைந்துள்ள வேலை வாய்ப்பு நிறுவனம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் மாத்திரம் பணிபுரிவதற்காக பெண்களை அனுப்பும் வகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.

இதன் அடிப்படையில் குறித்த பெண்களுக்கு பயணச்சீட்டுகள், முகவர் ஊடாக வழங்கப்பட்டு, சுற்றுலா வீசாவில் அவர்கள், அபுதாபிக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் இந்தப் பெண்களுக்கு சுற்றுலா வீசாவில் ஓமானுக்குச் சென்று வேலை செய்ய முடியாது என்பதும் அது சட்டவிரோதமானது என்பதும் தெரியாது. ஆனால், ஓமானில் தொழில் கிடைக்கும் என்று கருதியே அங்கு சென்றுள்ளார்கள்.

சுற்றுலா வீசாவில் பெண்கள் சென்றாலும், அவர்கள் விரும்பினால், ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில் வீசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனினும், அபுதாபியில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்படாது, இந்தப் பெண்கள் தொழில் அனுமதி இல்லாமல் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்கள் துபாய்க்கு அனுப்புவதாக கூறியே அபுதாபியில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் விமான நிலையத்தை அடைந்தபோதே ​​அவர்கள் ஓமானுக்கு அனுப்பப்படுவதை உணர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டதும், தாம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு அறிவித்ததாக கலைஞர் வீரமன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த மோசடியில் ஓமானில் உள்ள துாதரக அதிகாரி ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவரும் தொடர்பு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பயண முகவர் ஒருவரும், இன்று காலை இலங்கை வந்தபோது, வானுார்தி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent News