கத்தாரின் மத்யஸ்த்தில் கத்தாரில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, காசா மீதான இஸ்ரேலிய “ஆக்கிரமிப்பு” முடிவடையும் வரை, பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்கள் எந்தவொரு கைதிகள் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை இடமாற்றம் செய்வதற்குரிய அனைத்து விதமான பேச்சுவார்தைகளையும் நிராகரிக்கின்றன.
“ஆக்கிரமிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்ட பின்னரே தவிர, அதற்கு முன்னர் கைதிகள் அல்லது பரிமாற்ற ஒப்பந்தங்கள் பற்றி பேசக்கூடாது என்பதே பாலஸ்தீனிய தேசிய முடிவாகவுள்ளது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், ஹமாஸ் அமைப்பினரை முற்றாக அழிக்காமல் போரை நிறுத்த போவதில்லை என்று இஸ்ரேல் உறுதியாக கூறிவருகின்றது. அதேவேளை முழு போர் நிறுத்தம் அறிவிக்கப்படாமல் பிணைக்கைதிகள் பற்றிய பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளது.
இதனால் போர் இடை நிறுத்தம் ஏற்படுவது கூட தற்போதைக்கு கடினமானது என்பதே சர்வதேச வல்லுனர்களிடைய கருத்தாக உள்ளது.