பாகிஸ்தான் நாட்டில் பெரும்பான்மையாக முஸ்லிம் சமூகம் உள்ள சூழலில், அந்நாட்டில் சிறுபான்மை சமூக சிறுமிகளை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றி, அவர்களை முஸ்லிம் ஆடவர்கள் திருமணம் செய்து கொள்ளும் செய்திகள் பாகிஸ்தானிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இதனை குறிப்பிட்டு, மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கான, பிட்டர் வின்டர் என்ற செய்தி இதழ் வெளியிட்டுள்ள அறிக்கை திடுக்கிடும் தகவலை தெரிவிக்கின்றது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பைசாலாபாத் நகரில் அரசு பள்ளி கூடத்தில் முதல்வராக நைலா ஆம்பரீன் என்பவர் இருந்து வந்து உள்ளார். அந்த பெண்ணுக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்பட்டு உள்ளது.
அந்த பகுதியை சேர்ந்தவர் ஆரிப் கில். மாற்று திறனாளியான அவரால் தனது குடும்பத்தினரின் தேவைகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவரது மகளான சிதாரா ஆரிப் என்ற சிறுமியை நைலா வேலைக்கு கேட்டு உள்ளார்.
பணதேவையாக இருந்த சூழலில், முஸ்லிம் பெண்ணிடம் வேலைக்கு அனுப்ப ஆரிப் கில் முடிவு செய்து உள்ளார் என செய்தி இதழ் தெரிவித்து உள்ளது. ஆனால், நைலாவின் 60 வயது கணவரான ராணா தய்யப், சிறுமியின் அழகை கவனித்து உள்ளார்.
அதனால் சிறுமியை 2-வது மனைவியாக்குவது என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார். இதுபோன்ற வழக்குகளில், முதலில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
அதனால், திருமணத்திற்கு ஒப்பு கொள்ளும் ஒரே தீர்வு மட்டுமே அவர்களுக்கு எஞ்சியிருக்கும்.
கடந்த டிசம்பர் 25-ந்தேதியில் இருந்து சிதாரா ஆரிப் வீட்டுக்கு திரும்பவில்லை. அதன்பின்னர், சிறுமி மதம் மாறி ராணா தய்யப்பை திருமணம் செய்த அதிர்ச்சி விவரங்கள் அவரது பெற்றோருக்கு தெரிய வந்து உள்ளது.
அவரை காணாத பெற்றோர், அதுபற்றி விசாரணை செய்யும்படி போலீசில் புகார் அளித்து உள்ளனர். ஆனால், போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கு மிரட்டல் வந்து உள்ளது.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவரான பிரபல வழக்கறிஞரான அக்மல் பாட்டியை சிறுமியின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு உள்ளனர்.
இதன்பின்னர், 2 மாதங்கள் கழித்து போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். விசாரணை நடத்துவோம் என உறுதியும் அளித்தனர் என பிட்டர் வின்டர் தெரிவிக்கின்றது.
அக்மல் பாட்டியின் தலையீட்டுக்கு பின்னர், போலீசார் நைலா ஆம்பரீன் வீட்டுக்கு சென்று உள்ளனர். ஆனால் வீட்டில் நைலாவின் கணவரோ, சிதாராவோ இல்லை.
ராணா தய்யப், சிதாராவை 2-வது மனைவியாக கொண்டு சென்று விட்டார் என உறுதிப்படுத்தி, அதற்கான இஸ்லாமிய திருமண சான்றிதழை போலீசாரிடம் ராணாவின் மனைவியான நைலா காட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது மைனர் சிறுமியை திருமணம் செய்வது சட்டவிரோதம். ஆனால், சிதாராவுக்கு 18 வயது இருக்கும் என நம்புகிறேன் என போலீசாரிடம் நைலா தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அக்மல் கூறும்போது, பலாத்காரம் செய்து கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் ஒரு வருத்தத்திற்குரிய மாடல் ஆனது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த குற்ற நடைமுறைக்கு பல்வேறு இந்து சிறுமிகள் இரையான சம்பவங்களையும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 1.6 சதவீதம் கிறிஸ்தவ சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் இனவாதம் மற்றும் மதசகிப்பின்மைக்கு ஆளாகின்றனர்.
அவர்களை, முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்தினர் ‘சுர்ஹா’ அல்லது ‘காபிர்’ என அவதூறு ஏற்படுத்தும் வகையில் கூறி வருகின்றனர். கிறிஸ்தவ சமூகத்தினரில் பலர், சமூக பொருளாதார அளவில் பின்தங்கிய பின்னணியை கொண்டவர்களாகவும், கல்வி பெறாதவர்களாகவும், செங்கல் சூளை அல்லது இடங்களை தூய்மைப்படுத்தும் பிரிவில் பணி செய்து குறைவான ஊதியம் பெறும் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.