ரஷிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் நடைபெறும் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மாஸ்கோவின் தென்கிழக்கு மாவட்டமான மேரினோவில் உள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும். அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அலெக்ஸியின் செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் தெரிவித்தார்.
ரஷிய அரசையும் புடின் நிர்வாகத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்த நாவல்னி ரஷியாவில் ஆர்க்டிக் பிரதேசத்திலுள்ள தொலைதூர சிறையொன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நவால்னி சிறையில் இறந்துவிட்டதாக ரஷிய அரசு அறிவித்தது. நவால்னியை புடின் நிர்வாகம் கொன்றுவிட்டதாக மேற்கு நாடுகளும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.அவரது இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில் நாவல்னியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தப்பட்டது.தற்போது இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.