காசாமுனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே கிறிஸ்துமஸ் தினத்தின்போது காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் பல குடும்பங்கள் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹமாசுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி நீடிக்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது கடுமையாக கவலை அளிப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பை வலுவாக வலியுறுத்துவதாகவும், சமீப நாட்களில் மீண்டும் பல பொதுமக்களை பலிவாங்கிய கடுமையான குண்டுவெடிப்பை கண்டிப்பதாகவும்பிரான்ஸ் தெரிவித்துள்ளது.