இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில் தரைவழி தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தின் மேற்குகரையிலும்நடைபெற்று வருகின்ற
தாக்குதலில் இதுவரை 303 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட 5 இஸ்ரேலியர்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பிணமாக மீட்டுள்ளனர்.
காசாவில் ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக
இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை பாதுகாப்புப்படையினர்
இஸ்ரேலுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..