ஐ.நா. பொதுச்சபையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவை ‘பாரதம்’ என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில், ஜி-20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரத ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டு இருந்தமை, நாட்டின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றப்போவதாக சர்ச்சையை கிளப்பியது.
ஜி-20 மாநாட்டில், பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பிருந்த மேஜையில், ‘பாரத பிரதமர்’ என்ற பெயர் பலகை காணப்பட்டது. மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் ‘பாரதம்’ என்ற பெயரே இருந்தது.
இந்நிலையில், நேற்று ஐ.நா. பொதுச்சபையிலும் ‘பாரதம்’ என்ற பெயர் எதிரொலித்தது. ஐ.நா. பொதுச்சபை மண்டபத்தில் ஐ.நா. பொதுச்பையின் உயர்மட்ட அமர்வு நடந்தது. அதில் நடந்த பொது விவாதத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
விவாதத்தில் அவர் பேசத்தொடங்கும்போது, ”பாரதத்தின் வணக்கம்” என்று வணக்கம் தெரிவித்தார். தனது 17 நிமிட பேச்சின் முடிவிலும் பாரதத்தை குறிப்பிட்டார். ”நாங்கள் பாரம்பரியத்தை மட்டுமின்றி, தொழில்நுட்பத்தையும் சமமாக பின்பற்றி வருகிறோம். இந்த கலவைதான் இந்தியாவை அதாவது பாரதத்தை வரையறுக்கிறது” என்று அவர் கூறினார்.