ஆப்கானிஸ்தானில் செயற்பட்டு வரும் அழகு நிலையங்களில் இஸ்லாம் மதத்தினால் தடை செய்யப்பட்டுள்ள சேவைகள் அளிக்கப்பட்டு வருவதாலே அவற்றினை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக தலிபான் ஆட்சியாளா்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த நாட்டின் மதக் கலாசாரப் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சாதிக் அகீஃப் மஹ்ஜா் காணொளி அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
அதில், புருவங்களைத் திருத்துதல், பெண்கள் கூந்தலை நீளமாகக் காட்ட சவுரி முடியைப் பயன்படுத்தல்,தொழுகையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் அதற்கு முன்னர் முக அலங்காரம் செய்தல் போன்றன அழகு நிலையங்களில் வழங்கப்படும் இஸ்லாத்திற்கு விரோத சேவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், திருமணத்தின் போது மணப் பெண்களின் அலங்கார செலவுகளை மணமகன் வீட்டாரே ஏற்கும் வழக்கம் இந்த நாட்டில் காணப்படுவதால் மணமகன் வீட்டாரின் பெரும் பொருளாதார சுமையை தவிர்ப்பதற்காகவும் அழகு நிலையங்கள் மூடப்படுவதாக மஹ்ஜா் கூறியுள்ளார்.
இவ்வாறாக, அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்த தலிபான்கள் அதனை மீறி பெண்களின் உரிமைகளைப் பறித்து வருவதாவது சா்வதேச அளவில் கண்டனங்களிற்கு உள்ளாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.