டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணமானது.
அதன் போது, அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த 1,600 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு ஆராய்ச்சிக்கு பின்னர் 1985 ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவுக்கு அருகே கடலுக்கடியில் 4 கி.மீ. ஆழத்தில், சிதைந்த கப்பலின் முன்பாகம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, டைட்டானிக் கப்பலைச் சுற்றி பல ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழலில், டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிடுவதற்காக சில சுற்றுலா பயணிகளை நீர்மூழ்கி கப்பல் ஒன்று அழைத்துச் சென்றது.
இந்நிலையில் அந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த நீர்மூழ்கி கப்பலில் 5 சுற்றுலா பயணிகள் சென்றிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், நீர் மூழ்கிக் கப்பலில் பயணித்த அனைவரையும் பத்திரமாக கரைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.