எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமாக மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம் இந்த ஆண்டில் பொருளாதாரம் 3 சதவீதத்தால் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால கொள்கை தவறுகளாலும் தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகளாலும் இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏழை மக்கள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான நெருக்கடியின் தாக்கம் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியை அணுகுவதில் உருவாகும் தாமதத்தினால் ஏற்படும் பொருளாதார செலவுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய கடன் வசதியின் முதலாவது தவணைக் கடன், இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிட்ட புதிய நிதியுதவியை ஊக்குவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதிய, விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின், முதலாவது மதிப்பாய்வின் ஊடாக, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள், எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தனியார் கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபடவில்லை எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.