கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை வாழ் பெற்றோர்கள், சமய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வைத்த சில முறைப்பாடுகளுக்கமைய இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கல்முனை மாநகர மேயர் தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு காதலர் தினத்தில், இது போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, இது போன்ற ஒரு நிலைமையை தவிர்த்துக்கொள்ளும் சமூக நோக்குடன் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களிடமும் தங்களது ஆண், பெண் பிள்ளைகளை அன்றைய தினத்தில் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” – என்றும் கல்முனை மாநகர மேயர் கூறினார்.
இதேவேளை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் தனியார் வகுப்புக்களை நடத்துபவர்கள் கல்முனை மாநகர சபையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே அமுலில் உள்ளது.
அத்துடன், தனியார் வகுப்புக்கள் நடாத்தப்படுவதற்கான சில ஒழுங்கு விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான சுத்தமான காற்றோட்ட வசதி, இருக்கை ஒழுங்குகள், கழிவறை வசதிகள் என்பன சீராக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே அவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற முறைமையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் கல்முனை மாநகர மேயர் ஏ. எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.