Friday, November 15, 2024
HomeLatest Newsதுருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7,700ஐ தாண்டியது: தோண்ட தோண்ட பிணங்கள்

துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7,700ஐ தாண்டியது: தோண்ட தோண்ட பிணங்கள்

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. நிலநடுக்க மையப்பகுதிக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் தரை மட்டமாகி இருக்கின்றன.

இடிந்து தரை மட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளை நவீன எந்திரங்கள்உதவியுடன் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுவது, இவ்விரு நாடுகளிலும் தீராத சோகமாக, நெஞ்சை நொறுக்கும் துயரமாக மாறி இருக்கிறது.

இடிபாடுகளில் படுகாயங்களுடன் குற்றுயிராக கிடந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்விரு நாடுகளிலும் 2 ஆயிரத்து 300 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை (6,200) தாண்டி இருந்தது.

இந்நிலையில் துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7.700-ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 3,419 பேர் மண்ணோடு புதைந்து மரணத்தை தழுவி உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் ஒரு வார கால தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

இங்கு பெரும்பாதிப்புக்குள்ளாகி இருக்கிற 10 மாகாணங்களிலும் பெற்றோரை இழந்து தவிக்கிற குழந்தைகள் ஒரு பக்கம், குழந்தைகளைப் பறி கொடுத்து பரிதவித்துக்கொண்டிருக்கிற பெற்றோர்கள் மறுபக்கம் என பார்க்கும் இடமெல்லாம் கண்ணீர் காட்சிகள்தான்.

உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

நிலநடுக்கம் என்னும் இயற்கை பேரழிவினால் பாதிப்புக்குள்ளாகி நிலைகுலைந்து போய் உள்ள இந்த நாடுகளுக்கு உலக நாடுகள் பலவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவிக்கரம் நீட்ட முன் வந்திருப்பது, மனித நேயம் இன்னும் மறைந்து போய் விடவில்லை என்பதை ஆதாரப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் தென்கொரியா தேடல் மட்டும் மீட்பு படையினை அனுப்புவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மீட்பு படையுடன் நிவாரண பொருட்களையும் விமானம் மூலம் அனுப்பிவைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) அங்காரா சென்று நேரில் அனுதாபம் தெரிவிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துருக்கி அதிபர் எர்டோகனை தொலைபேசியில் அழைத்து பேசி உதவிகள் அளிக்கப்படும் என தெரிவித்த கையோடு நிவாரண, மீட்புப்படைகளை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் இருந்து மருத்துவ குழு துருக்கி விரைகிறது.

துருக்கிக்கு 65 நாடுகளில் இருந்து 2,660 பேர் மீட்பு, நிவாரண பணிகளுக்காக விரைவதாக துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரகால அமைப்பு ‘அபாட்’ தெரிவிக்கிறது.

துருக்கியில் மட்டுமே சுமார் 25 ஆயிரம் அவசர கால பணியாளர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பல இடங்களில் மீட்பு, நிவாரண பணி குழுவினர் வரவில்லை என்ற தகவலும் வந்திருக்கிறது.

துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான கஹ்ராமன்மாராஸில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், அங்குள்ள டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட் மக்களை வீதிகளுக்கு வர வைத்ததுடன் வெகுதொலைவில் உள்ள கெய்ரோ வரை உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹட்டாய் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் விளையாட்டு மையங்களிலும், கண்காட்சி அரங்குகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். பல இடங்களில் இரவெல்லாம் மக்கள் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். உயிரை உறைய வைக்கும் குளிர் வாட்ட, போர்வைகளைப் போர்த்திக்கொண்டு நெருப்பு மூட்டி அதில் குளிர் காய்ந்தனர்.

காசியான்டெப் நகரத்தில் மக்கள் வணிக வளாகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், மசூதிகளிலும், சமுதாய மையங்களிலும் அடைக்கலம் புகுந்தனர்.

துருக்கியில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு 3 லட்சம் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப கூடாரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

சிரியாவில் அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் நகரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உருக்குலைந்து போய் உள்ளன. உதவிகளுக்காக மக்கள் கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.

ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து அவசர கால பொருட்கள் சிரியாவின் டமாஸ்கஸ் போய்ச் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recent News