Monday, May 6, 2024
HomeLatest Newsகுருந்தூர் மலை தொடர்பில் நீதி மன்றம் வழங்கிய முக்கிய கட்டளை!

குருந்தூர் மலை தொடர்பில் நீதி மன்றம் வழங்கிய முக்கிய கட்டளை!

 முல்லைத்தீவு குருந்தூர் மலையில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டளையை அவமதித்து எவரேனும் புதிய கட்டடங்கள், மேம்படுத்தல்கள் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும்.

 அவ்வாறான சம்பவங்கள் நடந்தால் முல்லைத்தீவு பொலிஸார் உரியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

குருந்தூர் மலை  தொடர்பான வழக்கு நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுக்கப்பட்டது. அதன்போது மேற்கண்ட கட்டளை நீதிமன்றால் வழங்கப்பட்டது.

  2018 ஆண்டு முதல் முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் தொல்லியல் ஆய்வு என்னும் பெயரில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடம் அளிக்கப்பட்டு ,பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 இந்த வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கட்டளைகளை வழங்கி இருந்த போதும் அவற்றை உதாசீனம் செய்து அந்தப் பகுதியில் பௌத்த விகாரை கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுமானங்கள் நடைபெறும் பகுதிக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி, மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதி ,மற்றும் தொல்லியல்  திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 அப்போது இருந்த நிலைமையை தொடர்ந்தும் பேணவேண்டும் என்றும், புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது.

 எனினும் அந்த கட்டளையை மீறி கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்த நிலையில் , குருந்தூர் மலை ஆதி ஐயனார் ஆலயத்தின்  பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகளும் போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர். இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

 நேற்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கடந்த ஜூலை மாதம் வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டடங்களை அல்லது மேம்படுத்தல்கள் அமைத்தால் அதில் நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம் பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

Recent News