இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சிறந்த வர்த்தகம் மற்றும் இராஜதந்திர உறவுகள் உள்ளதாகவும், இரு நாடுகளின் கூட்டு முயற்சிகளினால் இதனை மேம்படுத்த முடியும் என பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி ஜகத் அபேவர்ண தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மொத்த வர்த்தக அளவு 400 மில்லியன் டொலர்களாகும்.மேலும் இலங்கைக்கான ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்காக வணிக பிரதிநிதிகளை உருவாக்க பாகிஸ்தான் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நூல் வணிகர்கள் சங்கம் (PYMA) உடனான சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துகளை பரிமாறிக் கொண்டார். இரு நாட்டு வணிகர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இன்றைய தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதியின் பிரதான பொருட்கள் இலங்கையினால் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் , 2021 இல் 11 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் சுற்றுலாத் துறையின் வருமானம் 3 மில்லியன் டொலர்கள் மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தெற்காசியாவில் இலங்கையின் இரண்டாவது பாரிய வர்த்தக பங்காளியாக பாகிஸ்தான் உள்ளது என சங்கத்தின் உப தலைவர் சொஹைல் நிசார் தெரிவித்தார்.
எனவே வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளுக்கு இடையே விமான மற்றும் கடல் இணைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் தயாரிப்புகள், குறிப்பாக மருந்துப் பொருட்கள், அரிசி, பழங்கள், மரக்கறிகள், சீமெந்து மற்றும் ஆடைகள் என்பன இலங்கை சந்தையில் பரந்த வீச்சைக் கொண்டிருப்பதாக சொஹைல் நிசார் மேலும் தெரிவித்தார்.
இதேபோல், இலங்கை தேயிலை, சுவர் டைல்கள், தரை டைல்கள் போன்றவை பாகிஸ்தானில் பரந்த சந்தை வாய்ப்பினைக் கொண்டுள்ளன.