1963ஆம் ஆண்டில் அப்போது 17 வயது மட்டுமே நிரம்பிய பள்ளி மாணவர்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படும் நபர்களுக்கு பின்னாளில் என்ன விளைவுகள் ஏற்படும் என்று ஆராயத் தொடங்கினர்.
இந்த ஆய்வில் ரேண்டி கார்டனர் மற்றும் ப்ரூஸ் மெக்லிஸ்டர் என்ற இரண்டு இளைஞர்கள் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இளம் வயதில் சவால் மிகுந்த போட்டியில் இவர்கள் பங்கேற்றனர். அதாவது நீண்ட நேரத்திற்கு தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்பதே அந்த போட்டி.
அதற்கு முன்பு 260 மணி நேரம் வரையிலும் தூங்காமல் இருந்ததே உலக சாதனையாக இருந்தது. ஏடிஜே ஹோனோலூலு என்பவர் அந்தச் சாதனையை செய்திருந்தார். அவரது சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே அந்த இளைஞர்களின் குறிக்கோளாக இருந்தது.
ஒருபக்கம் ஆய்வு, இன்னோரு பக்கம் உலக சாதனைக்கான போட்டி என்ற வகையில் இந்த முயற்சி நடைபெற்றது. போட்டியில் மெக்லிஸ்டர் பின் வாங்கிய போதிலும், ரேண்டி கார்டனர் தனது முயற்சியை கைவிடவில்லை. குறிப்பாக, தூங்காமல் இருந்த 3வது நாளிலேயே அவருக்கு பிரச்சனைகள் தொடங்கிவிட்டன.
பிரம்மை பிடித்ததைப் போன்ற எண்ணம், கவனத்திறன் குறைபாடு, ஞாபகசக்தி குறைவு போன்ற பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டார். இருப்பினும் முயற்சியில் இருந்து பின் வாங்கவிலை. சரியாக 11 நாட்கள் அல்லது 264 மணி நேரம் தூங்காமல் இருந்து சாதனை படைத்தார். அவரது மூளையை ஸ்கேன் செய்தபோது, அதன் சில பகுதிகள் தொடர்ந்து விழித்துக் கொண்டே இருந்ததாம்.
இதற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்டனர் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கு தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை. அந்த சாதனை முடிந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது கார்டனர் மிகுந்த மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, சாதனை முயற்சியின்போது எதிர்கொண்ட அதே பிரச்சனைகள் இப்போதும் வந்து போவதாக கவலையுடன் குறிப்பிடுகிறார்.