Friday, December 27, 2024
HomeLatest Newsஉலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் இந்தியா!

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் இந்தியா!

இந்தியாவின் வளர்ச்சி ஏனைய நாடுகளைப் போல பாதுகாப்பில் மாத்திரம், அல்லது பொருளாதாரத்தில் மாத்திரம் என வரைமுறைப்படுத்தப்பட்டது அல்ல. மாறாக அனைத்து துறைகளிலும் பன்முகத்தன்மை கொண்ட அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்ற ஒரு நாடு. இதன் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் சில பல சிக்கல்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் இந்தியா சந்திக்க வேண்டி வந்தாலும் கூட அவற்றை எல்லாம் பொறுமையுடன் எதிர்கொண்டு முன்னேறி வருவதில் இந்தியாவிற்கு நிகர் இந்தியாவே என்பது மிகை இல்லை. தற்போது இந்தியாவின் நிலையான அபிவிருத்திகள் தொடர்பாக உலக நாடுகளே இந்தியாவை மேற்கோள் காட்டி புகழ ஆரம்பித்து உள்ளன.

இதற்கு, அண்மையில் வியன்னாவில் நடந்த ஒரு கூட்டத் தொடரை உதாரணமாக கூற முடியும். இந்தியாவின் வளர்ச்சியை வளர்ந்து வரும் நாடுகள் உதாரணமாகக் காட்டி தமது மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது இந்தியாவின் திறன்.

கடந்த ஒக்டோபர் 11ம் திகதி, வியன்னாவின் இராஜாங்க விடயங்கள் தொடர்பான கல்வி கற்பிக்கும் Vienna School of International Studies in Diplomatic Academy இன் கூட்டம் ஒன்றிற்காக Austrian Institute for European and Security Policy அமைப்பு, rising power of இந்தியா, அதாவது ” எழுச்சிபெறும் இந்திய சக்தி ” எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் வியன்னாவில் உள்ள இந்திய தூதுவர் Jaideep Majumdar, வியன்னா பல்கலைக்கழக பேராசிரியர் Heinz Nissel, மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் Werner Fasslabend ஆகியோர் இந்தியாவின் வளர்ச்சி பற்றி உரையாற்றி உள்ளனர்.

முதலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதுவர் குறிப்பிடும்போது, இந்திய gdp இந்த வருடத்தின் முதல் இரண்டு கால் ஆண்டுகளில் 13 வீதம் வளர்ச்சியை கண்டு உள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் 7 வீதம் வளர்ச்சியடைய உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியா ஏற்கெனவே உலகப் பொருளாதார முன்னணி வரிசையில் இங்கிலாந்தை தோற்கடித்து ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதே வளர்ச்சியை தொடருமாக இருந்தால், 2027 ஆம் ஆண்டு ஜெர்மனியை தோற்கடித்து நான்காவது இடத்திற்கும் 2029ஆம் ஆண்டு ஜப்பானை தோற்கடித்து மூன்றாவது இடத்திற்கும் முன்னேறும் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், இந்தியா பாதுகாப்பு, அணு ஆராய்ச்சிகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகள் போன்ற விடயங்களில் சுய தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து முயற்சிகளை முன்னெடுத்து வருவதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது மாத்திரமின்றி கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக ஏனைய நாடுகள் அவதிக்கு உள்ளாகி இருந்த சந்தர்ப்பத்தில் இந்தியா முன்வந்து, ஏற்கனவே பிணக்கில் இருந்த நாடுகளுடன் கூட தொடர்பு கொண்டு அவற்றுக்கு உதவி செய்யும் முகமாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்தமை இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் மறைமுகமாக பாரிய பங்களிப்பை செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.

அடுத்து வியன்னா பல்கலைக்கழக பேராசிரியர் Heinz Nissel உரையாற்றும் போது, இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கத்தின் பங்களிப்பு குறித்து கூறியிருந்தார். அதாவது இந்தியாவின் ஜனத்தொகையில் அதிக அளவில் படித்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவின் தரத்தை உயர்த்துவதோடு மாத்திரமன்றி, சீனாவின் உற்பத்தி விநியோக நடவடிக்கைகளுக்கு சவால் கொடுக்கும் அளவில் இந்தியாவின் வினியோக நடவடிக்கைகளை பெருமளவிற்கு எடுத்துச் செல்லும் ஒரு காரணியாக இருப்பார்கள் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

அவர் குறிப்பிட விரும்பிய விடயம்,  இந்தியாவில் கல்வி கற்ற மக்களின் வீதம் அதிகரிக்கும் போது அவர்களின் பொருளாதார தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அத்தோடு அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதற்கான அவர்களது பொருளாதார தகைமைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதால், இந்தியாவில் உற்பத்திகளுக்கு உள்நாட்டிலேயே சிறந்த சந்தை வாய்ப்புகள் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது. 

மூன்றாவதாக, ஆஸ்திரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா தொடர்பாக கூறியுள்ள விடயங்கள், இந்தியாவின் வளர்ச்சியை எவ்வாறு பிற நாடுகள் மிகத் துல்லியமாக அவதானித்து வருகின்றன என்பதையும் இந்தியா எவ்வாறு பிற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்பதற்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. Werner Fasslabend அவர்கள் உரையாற்றும்போது இந்தியா, அதன் அயல் நாடுகளால் தொடர்ந்து கொடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் தாண்டி அதன் எல்லைகளை பாதுகாப்பாக பேணி வருவதோடு மாத்திரமன்றி பல்வகைமை கொண்ட வெளியுறவுக் கொள்கைகளை சீராக வளர்த்துக் கொள்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி நிலையில் வைத்துக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவின் அமைவிடம் குறிப்பாக மத்திய ஆசிய நாடுகள்இற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் நடுவே அமைந்து உள்ளது. எனவே இந்து சமுத்திரப் பிரதேசத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் என்பது எந்த நிலையிலும் மாறாத ஒன்றாக இருக்கும் என்பதால் பிற நாடுகளுக்கு இந்தியாவின் உதவி எப்போதும் தேவையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மற்றுமொரு முக்கியமான விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவும் சீனாவும் எல்லை பிரச்சனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டு நாட்டின் மக்களுக்கும் இடையே இடைத் தொடர்புகளை சீராகப் பேணும் விதமாக ஒரு கூட்டுறவு அமைப்பு அல்லது கூட்டுறவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அவசியம் இல்லையா என இந்திய தூதுவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கி இருந்த அவர், பொதுவாக இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையே,  நாடுகளுக்கு இடைப்பட்ட முரண்பாடுகளை தாண்டி மக்களுக்கு இடையேயான தொடர்புகளை பேணிக் கொள்வது அவசியமாக பார்க்கப்படும். ஜனநாயக நாடுகளைப் பொறுத்தவரையில் இது சாத்தியமாகவும் இருக்கும். ஆனால் சீனாவின் விடயம் அவ்வாறு அல்ல. மேலும் சீன அரசாங்கம் முன்னெடுக்கும் விடயங்களில் சீன மக்களிற்கு முக்கியத்துவம் எந்தளவு தூரம் இருக்கும் என்பதும் சந்தேகமே என கூறியுள்ளார்.

அதேவேளை இந்தியாவிற்கு மற்றும் ஒரு பெரும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விடயம் இந்த வாரம் நடைபெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள தகவல் படி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவின் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் முறையான rupay இனை அங்கீகரிப்பதற்கு முன்வந்துள்ளன எனக் கூறியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மேலும் பல நாடுகள் இதனை அங்கீகரிப்பதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியா G20 நாடுகளின் தலைமைப் பொறுப்பையும் ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் அவர்கள் குறிப்பிடும் போது, இந்தியா g20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து தற்கால சிக்கல்களை வினைத்திறனுடன் தீர்ப்பதற்குரிய கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளை திடமாக தீர்மானிக்கும் என உறுதி அளித்துள்ளார்.

எல்லைகளில் எதிரிகளின் அச்சுறுத்தல்களும் பிற நாடுகளுடன் இணைந்து செய்யும் சதி வேலைகளும் அதிகரித்து வந்தாலும் கூட, இந்தியா அதன் வளர்ச்சியை எந்தவிதத் தடையுமின்றி நேரான பாதையில் முன்னெடுத்து செல்கின்றது என்பதற்கு இவை சிறந்த உதாரணமாக அமைகின்றன. தற்காலிகமாக சில பிரச்சனைகள் இருந்தாலும் கூட,  இந்தியாவின் தூர நோக்க செயற்பாடுகள் மற்றும் திட்டமிடல்கள் மூலம் இவை விரைவில் சரி செய்யப்படும் என நம்புவதற்கு இவை போதிய ஆதாரமாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. 

Recent News