Thursday, December 26, 2024
HomeLatest Newsஆஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு ஏற்பட்ட நிலை!

ஆஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு ஏற்பட்ட நிலை!

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் படி அகதிகளை மீள் குடியமர்த்துவதற்கான பணிகள் மிகவும் மந்தகதியிலேயே நடந்து வருவதாக கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று பல ஆண்டுகளாக தடுப்பில் உள்ள அகதிகளை நியூசிலாந்தில் மீள் குடியமர்த்த தயார் என நியூசிலாந்து அரசு பல ஆண்டுகளாக சொல்ல வந்த போதிலும் அதனை ஆஸ்திரேலிய அரசு கிடப்பில் வைத்திருந்தது. இந்த சூழலில், 3 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 150 அகதிகளை மீள்குடியமர்த்தும் ஒப்பந்தத்தை கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொண்டது. 

இந்த ஒப்பந்தம் மூலம் நவுருத்தீவில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளும் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக உள்ள அகதிகளும் ஐ.நா. வழியாக நியூசிலாந்தில் மீள் குடியமரும் வாய்ப்பு ஏற்பட்டது. 

தற்போதைய நிலையில் இதுவரை 32 அகதிகள் நியூசிலாந்தில் மீள் குடியமருவதற்காக விண்ணப்பித்திருப்பதாக நியூசிலாந்து அமைச்சர் மைக்கேல் வுட் கூறுகிறார். 

“அந்த ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம், அதனால்தான் அப்படியொரு வாய்ப்பை முன்வைத்துள்ளோம்.. நியூசிலாந்தில் குடியமருவதற்காக இந்த வழியைத் தொடரும்படி சம்பந்தப்பட்டவர்களை (அகதிகளை) நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது” என்று நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் மைக்கேல் வுட் கூறியுள்ளார்.

இந்தாண்டு எஞ்சியுள்ள இடங்கள் அடுத்தாண்டு ஒதுக்கீட்டுக்கு மாற்றப்படுமா என்பதை அரசாங்கம் பரிசீலிக்கவில்லை எனக் கூறியுள்ள நியூசிலாந்து அமைச்சர் இதைப் பற்றி திறந்த மனதுடன் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பதாக நியூசிலாந்து அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.  

“கடந்த ஒன்பது ஆண்டுகளாக இவர்களுக்கு (அகதிகளுக்கு) ஏற்பட்ட மனநலப் பாதிப்பு, மீள்குடியேற்றத்திற்கான செயல்பாட்டில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான திறனைப் பாதித்திருக்கிறது. இந்த மீள்குடியேற்ற செயல்பாட்டின் மீது அகதிகள் இடையே போதிய நம்பிக்கை இல்லை,” எனக் கூறுகிறார் ஐ.நா. அகதிகள் முகமையை (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) சேர்ந்த எமிலி சிப்மன். 

ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்தில் மீள் குடியேறுவதற்கான வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அகதிகளில் 14 சதவீதமான அகதிகளே நியூசிலாந்தில் மீள்குடியேற ஆர்வம் காட்டியுள்ளதாக எமிலி சிப்மன் குறிப்பிடுகிறார். அத்துடன் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மீள்குடியேற விண்ணப்பித்து காத்திருக்கும் அகதிகளுக்கு நியூசிலாந்தில் மீள்குடியேறுவதற்கான வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதனால் நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் இருக்கும் அகதிகளில் 9 சதவீதமானோரே நியூசிலாந்தில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த 2018ம் ஆண்டு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, நவுருவில் நோயாளிகளாக உள்ள அகதிகளில் மூன்றில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். 60 சதவீதமானோருக்கு தற்கொலை எண்ணத்தை கொண்டிருந்தனர். 12 அகதிகளிடம் Resignation syndrome எனும் அரிய வகை மனநலப் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

அகதிகளின் இந்த நிலைக்கு ஆஸ்திரேலியாவின் கடுமையான குடியேற்ற அணுகுமுறை முக்கியமான ஒரு காரணம் என ஐ.நா. அகதிகள் முகமை சுட்டிக்காட்டியிருக்கிறது. 

Recent News