லித்துவேனியாவைச் சேர்ந்த ஓட்ட வீரர் அலெக்ஸாண்டர் சோரோகின், 24 மணித்தியாலங்களில் 319.6 கிலோமீற்றர் தூரம் ஓடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
41 வயதான சோரோகின் சானியா எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறார். 24 மணித்தியாலங்களில் அதிக தூரம் ஓடும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் வெரோனா நகரில் அண்மையில் நடைபெற்றது.
குறித்த,இப் போட்டியில் 319.6 கிலோமீற்றர் ஓடிய சோரோகின், முதலிடம் பெற்றதுடன் புதிய உலக சாதனை படைத்தார். சராசரியாக மணித்தியாலத்துக்கு 12.89 கிலோமீற்றர் வேகத்தில் அவர் ஓடினார்.
தனது, சொந்த சாதனையையே சொரோகின் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் 24 மணித்தியாலங்களில் 309.9 கிலோமீற்றர் தூரம் ஓடி உலக சாதனை படைத்திருந்தார்.
அலெக்ஸாண்டர் சோரோகினுக்கு முன்னர் இத்தகைய ஓட்டத்தில் உலக சாதனையாளராக விளங்கியவர் கிறீஸ் நாட்டைச் சேர்ந்த யியானிஸ் கவ்ரோஸ் ஆவார். அவர் 1997 ஆம் ஆண்டு 24 மணித்தியாலங்களில் 304.4 கிலோமீற்றர் தூரம் ஓடி உலக சாதனை படைத்திருந்தார்.
இம்முறை வெரோனா நகரில் நடைபெற்ற போட்டியில் போலந்தின் அன்ட்ஸேஜ் பியோட்ரோவ்ஸ்கி 301.85 கிலோமீற்றர் தூரம் ஓடி இரண்டாவமிடத்தையும் இத்தாலியின் மெக்ரோ 288.43 கிலோமீற்றர் தூரம் ஓடி 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.
மிக நீண்ட தூர ஓட்டத்தில் உலகின் முன்னிலை வீரராக திகழும் அலெக்ஸாண்டர் சோரோகின் 2013 ஆம் ஆண்டுதான் ஓட்டங்களில் பங்குபற்ற ஆரம்பித்தார். உடல் எடையைக் குறைப்பதற்காகவே அவர் ஓட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்துள்ள அலெக்ஸாண்டர் சோரோகின், நான் மிக களைப்படைந்துள்ளேன். ஆனால், இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.