Thursday, December 26, 2024
HomeLatest Newsஜனாதிபதி – சிண்டி மெக்கெய்ன் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதி – சிண்டி மெக்கெய்ன் இடையே விசேட சந்திப்பு!

ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் சின்டி மெக்கெய்ன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று கொழும்பில் சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கும் பங்கேற்றுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர்,

இலங்கையர்களுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தார்.

அவசர மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயல்படும் பல வழிகளையும் அவர்கள் கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சின்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கை சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு அமெரிக்காவின் நிதியுதவி எவ்வாறு ஆதரவளிக்கிறது என்பதை நேரடியாகக் காண ஆவலுடன் காத்திருப்பதாக நாட்டிற்கு வந்த பின்னர் தெரிவித்தார்.

இலங்கையில் அமெரிக்க உணவு உதவித் திட்டங்களை முன்னிலைப்படுத்தவும், இலங்கை தேசத்துடனான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் நீடித்த பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் தூதுவர் சின்டி மெக்கெய்ன் செப்டம்பர் 28 வரை இலங்கைக்கு விஜயம் செய்வதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்திப்பதற்கு மேலதிகமாக, தூதுவர் மெக்கெய்ன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் இணைந்து மத்திய மாகாணத்திற்குச் சென்று பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி வசதிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்குச் சென்று அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்கள் மூலம் நிவாரணம் பெறுபவர்கள் மற்றும் செயல்படுத்துபவர்களைச் சந்திக்கவுள்ளனர்.

Recent News