Wednesday, May 1, 2024
HomeLatest NewsIMFஇன் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்!

IMFஇன் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொள்ளப்பட்ட ஊழியர்மட்ட உடன்படிக்கையின் விபரங்களை சபையில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்த கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்ததையடுத்து வாக்குவாதம் மேலும் சூடுபிடித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் தொடர்பாக தன்னால் எதுவும் செய்ய முடியாது, ஆனால் அது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உரையாடுவேன் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல, “IMFஇன் ஒப்பந்தத்தைப் பற்றி உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்? நிதி தொடர்பான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் எவ்வாறு அப்படி கூற முடியும்? தவிர, சர்வதேச நாணய நிதியத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

எவ்வாறாயினும் ஜெனீவாவுக்குச் சென்ற இலங்கைப் பிரதிநிதிகள் ஒரு உடன்படிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கையின் விபரங்களைப் பெற்று தயவுசெய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, ‘ஜனாதிபதி வெளிநாட்டில் இருப்பதால் என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை, ஆனால் விரைவில் அவருடன் பேசுவேன்’ என்று சபாநாயகர் கூறினார்.

Recent News