முன்னர் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்று தற்போது சுதந்திர நாடுகளாகவும், நேட்டோ உறுப்புரிமை நாடுகளாகவும் காணப்படுகின்ற நாடுகளில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் மிக அண்மையில் தமது எல்லைகளை கொண்டிருக்கின்ற எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகள் தமது எல்லைகளை பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014ம் ஆண்டு கிரீமியாவை கைப்பற்றிய ரஷ்யா தற்போது உக்ரைனை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் கடுமையாக முயன்று வருவதாகவும் இதனைத் தொடர்ந்து மேற்படி நாடுகள் மேல் ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக நேட்டோ படையணியில் இருக்கின்ற ஜேர்மனியின் இராணுவத்தைக் கொண்டு முதலில் லிதுவேனியாவின் எல்லைகளை பலப்படுத்தும் முயற்சிகளில் நேட்டோ இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகையில் சுமார் 4,000 ஜேர்மனிய படையினர் லிதுவேனியா நிலப்பரப்புக்களை சென்றடைந்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் பாதுகாப்பு மற்றும் எல்லை பலப்படுத்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்படவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.