உலகளவில் தற்போது மிகப் பாரிய பிரச்சனையாக தோற்றம் பெற்றுள்ள சைபர் தாக்குதல் அல்லது இணையவழி தாக்குதல் திட்டங்களை முறியடிப்பதில் பெரும்பாலான நாடுகள் திணறி வருகின்றன.
நாடுகளின் அரசாங்கங்கள் மட்டுமன்றி தனியார் துறைகளும் மேற்படி சைபர் தாக்குதலுக்குட்பட்டு வருகின்ற சூழல் காணப்படுகின்றது.
இந்த நிலையில் சைபர் தாக்குதல் திட்டங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே அவற்றை முறியடிக்கும் புதிய செயலியை உருவாக்கி அதற்கான ஆதரவை தேடும் முயற்சியில் இறங்கியிருந்த உலகப் புகழ் பெற்ற இணைய பாதுகாப்பு நிபுணரான “ஸ்டீவன் ஸ்டோன்” சைபர் தாக்குதல்களை எதிர்த்து போராடி வரும் “ரூப்ரிக் ஜீரோ” என்னும் நிறுவனத்தின் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டதுடன் மேற்படி நிறுவனத்திற்கான மக்கள் ஆதரவை திரட்டும் முயற்சியிலும் இறங்கியிருந்தார்.
அவரது முயற்சி வெற்றி கண்டுள்ளதாகவும் இதுவரை சுமார் 400 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை திரட்டியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த வகையில் எதிர் காலத்தில் சைபர் தாக்குதல்களினால் வரும் பாதிப்புகளை இயன்றளவு குறைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.