கனடாவின் ரொறன்ரோவில் மூன்று நாட்களுக்கு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த பெண் ஒருவருக்கு 8,000 டொலர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வான்கூவரை சேர்ந்தவர் ஜியோவானா போனிஃபேஸ். இவர் Avis நிறுவனத்திடம் இருந்து மூன்று நாட்களுக்கு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் GMC Yukon Denali-ல் இருந்து விமான நிலையத்திற்கும் ரொறன்ரோ நகருக்கும், தொடர்ந்து தமது மாமியாரை சந்திக்கும் பொருட்டு Kitchener பகுதிக்கும் சென்றுள்ளார்.
இந்நிலையில்,ஒட்டுமொத்தமாக சுமார் 300 கி.மீ மட்டுமே அவர் அந்த வாடகை காரில் பயணித்துள்ளார். பின்னர் விமான நிலையத்தில் காரை ஒப்படைத்துவிட்டு ஐரோப்பாவுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார்.
மேலும், வாடகை கட்டணமாக செலுத்த சுமார் 1,000 டொலர்கள் தயார் நிலையில் வைத்திருந்ததுடன், அந்த நிறுவனத்திற்கு செலுத்தியும் உள்ளார். ஆனால் Avis நிறுவனத்திடம் இருந்து அளிக்கப்பட்ட கட்டண ரசீதில் 8,000 டொலர்கள் என குறிப்பிட்டிருப்பதை கவனித்த அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
விசாரித்ததில் ஒரு கிலோமீற்றருக்கு 25 சென்ட் வீதம் 36,482 கிலோமீற்றர் பயணித்ததற்காக குறித்த நிறுவனம் அவரிடம் அந்த கட்டணத்தை வசூலித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் போனிஃபேஸ் தெரிவிக்கையில் மணிக்கு 500 கி.மீ வேகத்தில் ஒரேயடியாக 72 மணி நேரம் பயணம் செய்தால் மட்டுமே இந்த 36,000 கி.மீ தொலைவை கடக்க முடியும் எனவும், இது ரொறன்ரோவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று முறை வாகனம் ஓட்டும் அதே தூரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் Avis நிறுவனமானது தங்களின் தவறை ஒப்புக்கொண்டதுடன், உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் எஞ்சிய தொகையை திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக போனிஃபேஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.