அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை கடந்த 14ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தினை நாளைய தினம் விசேடமாக கூட்டுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைய அமர்வில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே, அவர் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியை இராஜினாமா செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.