வவுனியாவில் டீசல் எரிபொருள் பங்கீடு சீராக நடைபெறாமையால் கறுப்பு சந்தையில் 1200 ரூபாய்கு டீசலை பெற்று சிறுபோக நெல்லை அறுவடை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சிறுபோகத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
யூலை முதல் கிழமையில் இருந்து ஓகஸ்ட் கடைசிக் கிழமை வரை இந்த அறுவடை இடம்பெறும்.
இதற்காக கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கு மேலதிகமான டீசல் எரிபொருள் தேவைப்படுகிறது.
இதனை வாராந்தம் பகிர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலகத்தால் தெரிவிக்கப்பட்ட போதும், அறுவடைக்கு தேவையான போதியளவிலான டீசல் வழங்கப்படவில்லை.
இதுவரை 27,000 லீற்றர் டீசல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய வேண்டிய நெல்லை 1200 ரூபாய்க்கு டீசலை பெற்றே அறுவடை செய்ய வேண்டியுள்ளது.
யூரியா உரத்தை 42000 ரூபாய்கும், அதிகரித்த விலையில் கிருமி மற்றும் களை நாசினிகளையும் பெற்று சிறுபோகத்தை மேற்கொண்ட விவசாயிகள் மாவட்ட செயலகத்தின் சரியான பங்கீடு முறைமை இல்லாமையால் கறுப்பு சந்தையில் 1200 ரூபாய்கு டீசலை பெற்று அறுவடை செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மாவட்ட விவசாய சம்மேளனத் தலைவர் அவர்களை கேட்டபோது, மாவட்டத்தில் தற்போது எரிபொருள் நெருக்கடி உள்ளது.
சிறுபோக அறுவடை சீராக நடைபெறாவிட்டால் சோற்றுக்கும் பஞ்சம் ஏற்படும்.
எனவே கனரக மற்றும் டிப்பர் வாகன சாரதிகள் சிறுபோக அறுவடைக்காக விவசாயிகள் டீசலை பெற விட்டுக் கொடுத்து உதவுமாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் டீசல் எரிபொருள் விநியோகிக்கும் போது கனரக மற்றும் டிப்பர் வாகனங்கள் அதிகமாக டீசலை பெற்றுக் கொள்வதனால் விவசாய தேவைக்கு டீசலை பெற முடியாது உள்ளது.
தற்போது கட்டுமாண பணிகள், குவாரி பணிகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் கனரக மற்றும் டீப்பர் வாகனங்களுக்கு ஏன் அதிக டீசல்? அவ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு வவுனியா மாவட்ட செயலகத்திடம் கோரிய போதும் அவர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.