இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்து வீட்டை அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், அதிபர் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.
மேலும் போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டையும் முற்றுகையிட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது. பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்களிடையே பெரிய அளவில் பாதிப்பும், மனஅழுத்தமும் ஏற்பட்டு உள்ளது.
இலங்கை மக்கள் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச சமூகமும் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.