இலங்கை மத்திய வங்கி தனது கணிப்புகளின்படி குறுகிய காலத்தில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அந்த கணிப்புகளின்படி, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பணவீக்கம் கணிசமாகக் குறையக்கூடும் என மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய கொள்கை நடவடிக்கைகளே இதற்கு காரணம் என இலங்கை மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த முன்னறிவிப்புகளில், உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு பற்றிய அனுமானங்களும் உள்ளடங்குவதாக மத்திய வங்கி கூறுகிறது.
இதேவேளை, நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கத்தை பலப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் கணிசமான முன்னேற்றம் காணப்படுவதாக மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஜூன் மாத இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1,859 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.