அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் 19 ஐ அடியொட்டியதாக 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்டாலும், அது அவ்வாறு அமையவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் சபையில் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
‘அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு,சுற்றாடல் மற்றும் மஹாவலி என மூன்று அமைச்சுகளை ஜனாதிபதி வகிக்க ஏற்பாடு இருந்தது.
ஆனால் 22 இல் பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டுமே ஜனாதிபதி வகிக்க முடியும். அதையும் நீக்குவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும்.’ – எனவும் நீதி அமைச்சர் விளக்கமளித்தார்.
மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தைக்கூட, அரசியலமைப்பு பேரவையே வழங்க வேண்டும்,அமைச்சர் நீக்கப்பட்டாலும், அமைச்சின் செயலாளர் தொடர்ந்தும் செயற்படலாம், இப்படி பல சிறப்பான ஏற்பாடுகள் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.
எனினும், மகாநாயக்க தேரர்களைக்கூட ஏமாற்றும் வகையிலேயே 22 முன்வைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.