Friday, November 15, 2024
HomeLatest Newsகோப் குழுவுக்கு டிமிக்கி விடும் அதிகாரிகள்

கோப் குழுவுக்கு டிமிக்கி விடும் அதிகாரிகள்

கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் விசேட நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கோப் குழுவின் விசேட கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோப் குழு உறுப்பினர்கள் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில் பிரதானமாக மூன்று விடயங்கள் தொடர்பில் குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. அதற்கமைய 2022 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கோப் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த மீளாய்வும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை ஓர் அறிக்கையாகத் தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையின் பிரதிகளை குழு உறுப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோப் தலைவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை மத்திய வங்கி, அரசாங்க மரக் கூட்டுத்தாபனம், மக்கள் வங்கி, அபிவிருத்தி லொத்தர் சபை, வரையறுக்கப்பட்ட கட்டடப்பொருட்கள் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட லிற்றோ கேஸ் லங்கா மற்றும் வரையறுக்கப்பட்ட லிற்றோ கேஸ் டெர்மினல் லங்கா தனியார் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொடர்பான தீர்மானம் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் தொடர்பில் குழு வழங்கிய சில தீர்மானங்களுக்குரிய அறிக்கைகள் இதுவரை குழுவுக்கு வழங்கப்படவில்லை எனவும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் கடுமையாகச் செயற்பட நடவடிக்கை எடுக்கவேண்டுமென குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பாராளுமன்றமும் குழுவும் மேலும் தலையிட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

Recent News