கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் இதுவரை 599 பேர் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலும் 127 பேரைத் தேடி தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கும், கந்தகாடு முகாமில் நேற்றுமுன்தினம் இரவு மோதலொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் அங்கு புனர்வாழ்வு பெற்ற கைதியொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக வெலிகந்தை காவல்துறை உத்தியோகத்தவர்கள் குறித்த புனர்வாழ்வு முகாமிற்கு சென்றிருந்தபோது, புனர்வாழ்வு பெற்றுவந்த சுமார் 700க்கும் மேற்பட்ட கைதிகள் (726 பேர்) முள்வேலிகளை தகர்த்தெறிந்து, அங்கிருந்த தப்பிச் சென்றிருந்தனர்.
தப்பிச் சென்றவர்களை கைது செய்ய முற்பட்ட போது சோமாவதிய – பொலன்னறுவை வீதியின் பெரியாறு பாலத்திற்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டது.
தப்பிச் சென்றவர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல்வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்னனர்.
அவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சிலர், மோதலில் பலியானவரின் சடலத்தை பெரியாறு பாலத்திற்கு அருகில் வைத்து கொண்டு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் சடலத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தின் போது ஏற்பட்ட மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுக்கின்றனர்