நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து 161 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.3 என்ற அளவில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இதேவேளை நேற்று ஆப்கானிஸ்தான், மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜூன் 21 அன்று குஜராத்தில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 22 அன்று அதிகாலை 2.24 மணியளவில் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் 6.1 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது வரை ஆயிரம் பேர் வரை பலியாகி இருப்பதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 22 அன்று ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் உயிர்ச்சேத மற்றும் பொருட்சேத விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
ஜூன் 22 அன்று நள்ளிரவில் மலேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 561 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை.
ஜூன் 23 – அன்று அதிகாலை 5 மணியளவில் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.4 ஆக பதிவானது. அதேபோல, குடகு மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத போதிலும், பல வீடுகள் சேதமடைந்தன.
ஜூன் 23 – அன்று நேபாளத்தில் அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து 161 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.3 என்ற அளவில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிர்ச்சேத மற்றும் பொருட்சேத விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
தெற்காசியாவின் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து புவியியல் வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய நிலத் தட்டு (Indian tectonic plate) ஐரோப்பா- ஆசியாவை உள்ளடக்கிய யூரேசிய நிலத் தட்டுடன் (Eurasian plate) வடக்கு நோக்கி தள்ளுவது மோதுவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் இந்த நிலநடுக்கங்கள் இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகவும் புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.