ஈராக்கிலுள்ள நீர்த்தேக்கத்துக்கு அடியில் மறைந்திருந்த 3,400 ஆண்டு பழைமைவாய்ந்த நகரம் ஒன்று வரட்சியால் மீண்டும் தோன்றியுள்ளது.
மொசூல் நீர்த்தேக்கத்தில் குர்திய, ஜெர்மானியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நடத்தினர்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திலும் பெப்ரவரி மாதத்திலும் அத்தகைய பணிகள் இடம்பெற்றன. இந்த நகரம் வட ஈராக்கின் குர்திஸ்தான் வட்டாரத்திலுள்ள திக்ரிஸ் நதிக்கு அருகில் உள்ளது.
கி.மு. 1550ஆம் ஆண்டுக்கும் கி.மு. 1350ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மிட்டானிப் பேரரசின் முக்கிய மையமாக அந்த நகரம் விளங்கியதாக நம்பப்படுகிறது. அதன் பெயர் ஸாஹிக்கு என்றும் நிபுணர்கள் கூறினர்.
ஈராக்கிய அரசாங்கம் 1980களில் மொசுல் நீரணையைக் கட்டியபோது அந்த நகரம் நீருக்கடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. அது மீண்டும் இவ்வாண்டுதான் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
நீர்மட்டம் எப்போது மீண்டும் உயரும் என்பது தெரியவில்லை என்பதால் நிபுணர் குழு இவ்வாண்டே அகழ்வாராய்ச்சிப் பணிகளை நடத்தியதாக குறிப்பிடப்பட்டது.