இலங்கையில் பௌத்த மதத்தின் ஒரு அங்கமான “தன்சல்” என்ற போசனத் தானத்தை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எனினும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போசனத் தானத்தை பல்வேறு இடங்களிலும் அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு இடங்களில் வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் நின்ற தமது வாகங்களுக்கு எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.
முன்னர் எரிபொருளுக்காக மணித்தியாலங்கள் என்ற அளவில் காத்திருந்த வாகன ஒட்டுநர்கள் தற்போது ஒரு நாள் அல்லது இரண்டு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் வரிசையில் நின்று வாகனங்களுக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்.
சில இடங்களில் வீடுகளிலும் வரிசையில் நிற்கும் வாகன ஓட்டுநர்களுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன.
அண்மையில் கொழும்பு , காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எரிபொருளுக்காக வரிசையில் நின்றவர்களுக்கு போசனத் தானத்தை வழங்கினர்
அதேநேரம் அலுத்கம பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் மூன்று நாட்களாக காத்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கான “பலாக்காய்” தானம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தானத்தின்போது இன மத பேதம் எதுவுமே பார்க்கப்படுவதில்லை.
ஆனால் இலங்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த ஒற்றுமையை உடைக்க சுயலாப அரசியல் தரப்புக்கள் முனைகின்றன.
எனவே பொதுமக்களே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.