யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்பாக இன்று காலை 8 மணியளவில் புதுமுக மாணவி ஒருவர் மீது ஆசிட் வீசுவதாக தண்ணீர் போத்தலை வீச முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் பல்கலைகழகத்தின் புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஆரம்பமாகி, வழிப்படுத்தல் நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை 8:00 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வழிப்படுத்தல் நிகழ்விற்காக வருகை தந்த பல்கலைக்கழக புதுமுக மாணவி ஒருவர் மீது அசிட் வீசப் போவதாக மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியே வந்த சிரேஷ்ட மாணவர்கள் குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து மாணவியினை வழிப்படுத்தல் நிகழ்விற்கு அனுப்பிவிட்டு, இளைஞனை விசாரித்த நிலையில், குறித்த அசிட் போத்தல் தண்ணீர் போத்தல் என தெரியவந்ததோடு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21வயதான இளைஞன் என தெரியவந்தது.
இதனையடுத்து, பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இது பல்கலைக்கழக வாசலில் இடம்பெற்ற காரணத்தினால் பல்கலைக்கழகத்திற்குள் இந்த பிரச்சினையை கொண்டு வரவேண்டாம் வெளியில் வைத்து பிரச்சினையை தீருங்கள் என, பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களிடம் கடுமையான தொணியில் கூறியுள்ளனர்.
பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகள் இது தொடர்பாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களின் இவ்வாறான பதிலையடுத்து மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு இது தொடர்பாக அறிவித்திருந்தனர்.
இதற்கிடையில், குறித்த இளைஞன் திடீரென வந்த மோட்டார் சைக்கிளில் மாணவர்களின் பிடியிலிருந்து தப்பி ஓடி சென்று ஏறி சென்றுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், குறித்த இளைஞனின் புகைப்படத்தையும், குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வாகனத்தின் இலக்கத்தையும், புகைப்படத்தை எடுத்துச் சொன்றதோடு, மாணவர்களின் வாக்கு மூலத்தையும் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.