இலங்கையில் கடந்த மூன்று நாட்களாக பெண்களின் சடலங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி அட்டுளுகம பிரதேசத்தில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி ,வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து இதுவரை பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அட்டலுகம பெரிய பள்ளிவாசல் பொது மையவாடியில் குறித்த சிறுமியின் ஜனாஸா நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.சிறுமி தாய் மற்றும் தந்தையினையினை இழந்த நிலையில் மாமனாரின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார்.
நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டுபிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிசார் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவைடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இரவு 7.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார்; மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும்
புத்தகங்கள் மீட்கபட்டுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியொருவர் காணாமல் போயிருந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் நேற்று இரவு சிறுமியெருவர் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளார் .
நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தனது விருப்பத்தின் பேரில் குறித்த காப்பகத்தில் இருந்து தப்பி சென்றதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இது தவிர தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று இன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் வீசினார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.