முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரையும் எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் வடரெகா சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
சிறைக் கைதிகள் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மேல் மாகாண பொலிஸ்மா அதிபர் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.