Friday, January 17, 2025
HomeLatest Newsநினைவேந்தலுக்கு தயாராகவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம்!

நினைவேந்தலுக்கு தயாராகவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம்!

தமிழினப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று மே 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச பிரதான வீதியில் இருந்து இன்றைய தினம் 13 ஆம் ஆண்டு இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஷ்டிப்பதற்காக வடக்கில் இருந்தும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டியில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்ட பேரணி தற்போது முள்ளிவாய்க்கால் நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் என்ற ரீதியில் வேற்றுமைகளைத்துறந்து அனைவரையும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மாலை 6 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன், இயலுமானவரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவுகூருவோம் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போர் முடிவுக்கு வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்ய முடியாதளவுக்கு இராணுவ நெருக்குவாரங்கள், தடைகள் பல காணப்பட்டன.

காலப்போக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் தடைகளையும் மீறி நடக்க ஆரம்பித்தன. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல், பெருமளவான மக்களின் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தேறின.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் காணப்பட்ட பாதுகாப்பு இறுக்க நிலைக்கு மத்தியிலும் சாதாரணமாக நினைவுகூரல்கள் இடம்பெற்றன.

ஆனால் 2020ஆம் ஆண்டு கோவிட் தொற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனைக் காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அரசாங்கம் தடைபோட்டது. அதேபோல் 2021ஆம் ஆண்டும் இதே நிலைமை காணப்பட்ட போதிலும் அமைதியான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, தமிழினப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.

Recent News