எதிர்காலச் சந்ததியினருக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் வகையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் இலங்கைவாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளுமாறு சிங்களக் கலைஞர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்களால் தமிழ்மொழியை சரளமாகப் பேச முடியாமைக்கு வெட்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ள சிங்களக் கலைஞர்கள், இலங்கை தேசத்தின் 90 வீதமான தமிழர்களுக்குச் சிங்கள மொழியை சரளமாகப் பேச முடியும் என்பது பெருமைக்குரியது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிங்களக் கலைஞர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“பேரன்புமிக்க தமிழ்ச் சகோதரர்களே! இது உங்களுடைய தேசம். நாம் பிறந்த இந்தத் தேசத்தை நமது எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாப்போம். ஆகவே, கசப்புணர்வுகள் கடந்து அவற்றை மறந்து காலிமுகத்திடலுக்கு வாருங்கள் எம்மோடு இணையுங்கள்.
அன்பான தமிழ்ச் சகோதரர்களே! உங்களை அன்போடு அழைக்கின்றோம். வந்து எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.
நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு சீராக அமையும் என்று நம்பி. இருந்தோம் ஆனாலும் அந்த நம்பிக்கை வீணாகி விட்டது.
ஆகவேதான் கலைஞர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து இருக்கின்றோம். இன்றைய இந்த ஆட்சியானது நமக்குத் தேவையில்லை. நாட்டை சிறந்த முறையில் நிர்வகித்துக்கொண்டு நடத்துபவர்களே எமக்குத் தேவை. அதற்காக நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்” – என்றனர்.