Saturday, January 11, 2025
HomeLatest Newsபிரதமரை பதவி நீக்குமாறு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை! – ஜனாதிபதி மறுப்பு

பிரதமரை பதவி நீக்குமாறு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை! – ஜனாதிபதி மறுப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் 41 சுயேச்சை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சரியான பதிலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோரிக்கையை நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதும் ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய நிறைவேற்று சபையொன்றை உருவாக்கி புதிய பிரதமரை நியமித்து நிறைவேற்று சபையின் பணிப்புரையின் பேரில் எதிர்கால தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் 41 சுயேச்சை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நிறைவேற்று சபையின் அறிவுறுத்தலின் பேரில் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சரவை அமைச்சர்களை நியமித்தல், அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களை நியமித்து ஒவ்வொரு அமைச்சுக்கும் நிபுணர்கள் குழுவை நியமிக்குமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் சம்பளம் வழங்காமல் தமது ஏனைய சலுகைகளை தியாகம் செய்ய வேண்டும் எனவும் அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்து செய்து 19வது திருத்தத்தை திருத்தங்களுடன் கொண்டுவர வேண்டும் எனவும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News