Tuesday, December 24, 2024
HomeLatest News“கொலைகார நந்தசேன கோட்டாபய” நீ எங்களுக்கு தேவையில்லை! – பொங்கியழுந்த பௌத்த தேரர்

“கொலைகார நந்தசேன கோட்டாபய” நீ எங்களுக்கு தேவையில்லை! – பொங்கியழுந்த பௌத்த தேரர்

“கொலைகார நந்தசேன கோட்டாபய” நீ எங்களுக்கு தேவையில்லை என ராஜாங்கனே சாத ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத் திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர், வெளியிட்டுள்ள காணொளியில் இதனை கூறியுள்ளதுடன் அரச தலைவரை ஒருமையில் கடுமையாக திட்டியுமுள்ளார்.

அவர் தெரிவித்தவை வருமாறு,

“கொலைகார நந்தசேன கோட்டாபய. முழு நாடும் வெளியில் இறங்கியுள்ளது. உன்னை போகுமாறு கோருகின்றனர்.

உன்னை வீட்டுக்கு அனுப்பி வைப்பது மட்டும் போதாது. பல ஆண்டுகளாக நீயும், உனது அண்ணன் தம்பிகளும் இணைந்து எனது தாய் நாட்டை கொள்ளையடித்தீர்கள். அப்பாவி மக்களை கொன்று நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்.

நாடு இன்று கொள்ளையர்கள், கடத்தல்கார்கள்,போதைப் பொருள் விற்பனையாளர்கள், பாதாள உலகத்தினர், குற்றவாளிகளால் நிறைந்துள்ளது.

நீ மட்டுமல்ல, எந்தத் திருடனும் எனது தாய் நாடான இலங்கைக்கு தேவையில்லை. இனிமேல் நாட்டில் எவனுக்கும் கொள்ளையிட இடமளிக்கப் போவதில்லை. திருடர்களின் காலம் முடிந்து விட்டது.

முழு நாட்டு மக்கள் என்ற வகையில் மோசடியாளர்களையும் கொள்ளையர்களையும் வீட்டுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம். கொள்ளையிட்ட டொலர்களை தயவு செய்து கொடுத்து விட்டு, உன்னைப் போகச் செல்ல முடியாது. உன்னை சிறையில் அடைக்க வேண்டும்.

நாங்கள் தற்போது காலிமுகத் திடலில் இருக்கின்றோம். ஆர்ப்பாட்டகார்களை தாக்குதவதற்கு ஆயிரக்கணக்கான படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டோம்.

நீ அணியும் உள்ளாடை முதல் உனது அமெரிக்காவில் இருக்கும் மகன், மகிந்த, பசில் உட்பட அனைவரும் மக்கள் வரியை செலுத்தியதன் காரணமாகவே சுகபோகமாக வாழ்கின்றீர்கள்.

போரில் ஈடுபடும் போது தோட்டாக்கள் முதல் உணவு வரை நாட்டு மக்களே படையினருக்கு வழங்கினர். நாங்கள் படையினரை நேசிக்கின்றோம். ஆர்ப்பாட்டகார்கள் எவர் மீதும் கை வைக்க வேண்டாம் என நான் படையினர் மற்றும் காவல்துறையினரிடம் கோருகிறேன்.

பிள்ளைகளுக்கு பால் மா, எரிவாயு, பிள்ளைகளுக்கு சாப்பாடு கோரியே மக்கள் போராடுகின்றனர். முழு நாடும் வங்குரோத்து அடைந்துள்ளது.

எரிபொருள் இல்லை, பசளைகள் இல்லை, எரிவாயு இல்லை. மக்களால் வீடுகளை நிர்மாணிக்க முடியவில்லை. சீமெந்து 1,500 ரூபாய்.

மேலும் கொடுமைகளைச் செய்யாது நந்தசேன நீ பதவி விலகு. உனக்கு மாத்திரமல்ல சகல திருடர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். மீண்டும் ஒருவன் வந்து கொள்ளையிட நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்.

அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கொள்ளையர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதேபோல் கொள்ளையிட்ட பணத்தை அரசுடமையாக்கி, மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

இந்த நாட்டை அழித்தது ராஜபக்ச என்ற குடும்பம். இதனால், தயவு செய்து பதவி விலகுங்கள். ராஜபக்சவினர் வெளியேற வேண்டும் என்பதே எமது ஒரே கோரிக்கை. இடைக்கால அரசாங்கம் என்று எந்த அரசாங்கமும் எமக்கு தேவையில்லை என ராஜாங்கனே சாத ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

Recent News