ஏறக்குறைய எட்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரைவைத் தொழில்நுட்பத்தை வெளிக்காட்டி நிற்கும் வகையிலான பாறையில் உருவாக்கப்பட்ட அமைப்பு மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் போதே இந்த பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு புதிய கற்காலத்தைச் சேர்ந்தது என்றும் தானியங்களை அரைப்பதற்கான அமைப்பு என்றும் அந்த நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் தே.கல்லுப்பட்டி அருகே உள்ள கோபால்சாமி மலைப் பகுதியில் பழமையான தொல்லியல் தடயங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலே அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு கல்லாலான வட்டச்சில்லு, அரைப்புக்கற்கள், சிவப்பு நிறப் பானை ஓடுகள், புதிய கற்கால கற்கோடரி, இரும்புக் கசடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.