Friday, November 15, 2024
HomeLatest Newsமியன்மாரில் பல்கலை மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை!

மியன்மாரில் பல்கலை மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை!

மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு இராணுவ நீதிமன்றினால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி அவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாணவர்கள் தவிர மேலும் 4 இளைஞர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியாயமான விசாரணையின் அடிப்படை கோட்பாடுகளை மீறியும், சுதந்திரம் மற்றும் பாரபட்சமின்மைக்கான முக்கிய நீதித்துறை உத்தரவாதங்களுக்கு முரணான வகையிலும் இராணுவம் உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மாரில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து 100 க்கும் மேற்பட்டோருக்கு இராணுவ நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கு மரண தண்டனையை ஒரு ஆயுதமாக  மியான்மார் ராணுவம் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News