“இசை இன்றி அமையாது உலகு” பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் பயணிக்கும் வல்லமை கொண்டது இசை. இசைக்கருவிகளை கொண்டு மட்டும் இசைப்பது இசையல்ல.
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் இசை இணைந்திருக்கிறது. இந்த இசையை இன்னும் மேம்படுத்தி செவிக்கு இனிமையாக்கிய இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய பதிவுதான் இது.
இன்று பிறந்தநாள் கொண்டாடுவது ரகுமான் மாத்திரமல்ல. இசைக்கும் பிறந்தநாள் தான்.
இன்று போல் ஒருநாளில் 1967ஆம் ஆண்டு பிறந்தார் ஒஸ்கார் நாயகன். பிறக்கும் போதே இசையை அழுகையாய் அழைத்து வந்துவிட்டார் போல. அன்று தொடங்கி இன்று வரை உலக சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இசையாய்.
தமிழ்நாட்டில் கஸ்தூரிக்கும் ஆர். கே. சேகருக்கும் மகனாக பிறந்தவர் தான் அருணாச்சலம் சேகர் திலீப் குமார். இவரது குடும்பமே ஒரு இசைக்குடும்பம். திலீப்குமாரின் தாத்தா ராஜகோபால் பாகவதர் அந்தக்காலத்தில் ஒரு சிறந்த பாடகர். அதன் மரபணுதான் இன்று ஓடிக்கொண்டிருக்கிறது.