சீனாவின் புஜியான் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 372.4 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இதனால் நான்பிங்,சான்மிங் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.கனமழைக்கு இதுவரை 378 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 880 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகின. சுமார் 415 மில்லியன் யுவான் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தென் குவாங்டாங் மாகாணத்தில் ஹாங்காங்கின் எல்லையில் கடுமையான வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளான ஹூபிங் மற்றும் புஜன் மாகாணத்தில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டனர். மீஜோ நகரில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.தென்சீனாவின் பெர்ல் நதிப்படுகையில் உள்ள ஹன்ஜியாங் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.கடந்த மாதம், சீனா முழுவதும் 17 மாகாணங்களில் வெள்ளம் தொடர்பான பேரழிவுகளில் பலர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போயுள்ளனர் என்று அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.