Tuesday, December 24, 2024
HomeLatest Newsஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை!

ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை!

ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் இலங்கையை விட்டு வெளிநாடு செல்கின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய நாடு துரிதமாக வீழ்ச்சிப்பாதையில் செல்கின்றது என்பதற்கான அறிகுறி இது எனவும் தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 8 மாதங்களில் 500 மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

பொறியிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

கடுமையான ஏமாற்றத்தையும் விரக்தியையும் எதிர்கொண்டுள்ள இவர்கள் தங்கள் பிள்ளைகளிற்காவது சிறந்த கல்வியை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்.

பல்கலைழக கல்விக்கான அவசியமான வளங்கள் இலங்கையில் இல்லாததன் காரணமாக பெற்றோர் தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாடுகளிற்கு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் எங்கள் எதிர்கால இயற்கை வளங்களை இழக்கின்றோம், இலங்கையிலிருந்து வெளியேறும் அனைத்து தனிநபர்களும் இலங்கையின் இலவச கல்வி மூலம் உருவாக்கப்பட்டவர்கள்.

இது நாடு துரிதமாக வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கின்றது என்பதற்கான அறிகுறி, இந்த விடயங்கள் குறித்து அனைத்து பொதுமக்களும் ஆழமான புரிந்துணர்வை கொண்டிருக்கவேண்டும்.

இந்த நிமிடம் வரை நாட்டை மீள கட்டியெழுப்ப முடியும் என்றே நம்பிக்கை கொண்டுள்ளோம், இதற்கு தேசிய ஐக்கியமும் கருத்தொருமைப்பாடும் மிகவும் அவசியம்.

இது நாடாளுமன்றத்தின் ஊடாக உருக்வாகவேண்டும், கருத்தொருமைப்பாடு பொதுமக்கள் ஊடாக உருவாகவேண்டும்.

2020 இல் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தமே நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிவடைவதற்கு காரணம், 20வது திருத்தம் குறித்து எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் மக்களின் கருத்துக்களை அறிய முயலவில்லை.

20வது திருத்தம் மூலமே நாடு அழிக்கப்பட்டது. அந்த திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட தருணம் முதல் நாங்கள் நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தினர் அதனை எதிர்த்தோம், அதில் உள்ளடங்கியுள்ள பல ஆபத்துக்களை அடையாளம் கண்டு தெரிவித்தோம்.

மாறாக அரசமைப்பிற்கான 19வது திருத்தத்தை மீண்டும் வலுப்படுத்தவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளோம். உறுதியளித்தபடி நீதிமன்றத்தின் பரிந்துரைகளிற்கு ஏற்ப சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நிச்சயமாக இடம்பெறவேண்டும்.

இது மக்களிற்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி, மக்கள் எதிர்கொண்டுள்ள நாளாந்த அவலங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recent News